நல்ல சேதி-3 31 ஜனவரி

தினமலர் 31 ஜனவரி கடலூர் இணைப்பு பக்கம்1
செங்கால் ஓடை பிரச்சினையில் விவசாயிகளுக்கு விடிவுக்காலம்!

கடலூர் மாவட்டத்தில் வீராணம் ஏரிக்கு நீர் வரும் செங்கால் ஓடை 30 இலட்சம் செலவில் தூர் வாரப்பட்டு வருகிறது. இது பல ஆண்டுகளாக தூர் வாரப்படாமல் இருந்தது. 2005 இல் கொஞ்சம் தூர் வாரப்பட்டு ஆக்கிரமிப்பு பிரச்சினைகளால் நின்று போனது.
மழைக்காலங்களில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம், பாளையங்கோட்டை கள்ளாத்தூர், செந்துறை உட்பட பல பகுதிகளில் பெய்யும் மழை நீர் இந்த ஓடை வழியே தான் ஏரிக்கு வரும். தூர் வாரப்படாமல் இந்த நீர் சித்தமல்லி அகரபுத்தூர், பா.புத்தூர், கருணாகர நல்லூர் ஆகிய கிராமங்களில் புகுந்து விளை பயிர்களை நாசம் செய்தது.
இப்போது ராஷ்ட்ரீய சம்விகாஸ் யோஜனா திட்டத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தூர்வாரும் பணி துவங்கி

நடைபெற்று வருகிறது.
சுமார் 20,000 ஏக்கர் நிலம் வெள்ள அபாயத்தில் இருந்து காப்பாற்றப்படும் என்று தெரிகிறது.

நல்லசேதி 30-01-2008

பத்தாயிரம் கிராமங்கள் இஸ்ரோவினால் விண்வெளி நுட்பத்துக்கு போகின்றன:

டெக்கான் க்ரானிகிள் ஜனவரி 30, 2008

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையம் 4000 கிராம ப்ளாக்குகளில் கிராம வள மையங்கள் (விஆர்சி) அமைப்பதில் வேகமாக ஈடுபட்டு வருகிறது. இந்த 5 ஆண்டு திட்டத்துக்குள் 10, 000 அமைக்கப்பட்டுவிடும். மற்றபடி அணுக இயலாத கிராமங்கள் இதனால் தொடர்ப்புக்கு வந்து விடும். செய்திகள், வேளான் சேவைகள், தொலைதூர மருத்துவம், படிப்பறிவு நடவடிக்கைகள் ஆகியன இதனால் சாத்தியப்படும்.
இப்போது ஏறத்தாழ 30,000 மெய்நிகர் வகுப்பறைகள் உள்ளன. 2 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றன. இதை 3 கோடி கிராம குழந்தைகளுக்கும் கிடைக்கும்படி செய்வதே இத்திட்டத்தின் ஒரு நோக்கம். தமிழ்நாட்டில் திருவையாறு, செம்பட்டி, தங்கச்சிமடம் ஆகிய இடங்களில் இந்த மையங்கள் வானிலை, நீர்வள மேலாண்மை, இயற்கை விவசாயம், மீன்பிடிக்க தகுந்த இடங்கள் அறிதல் ஆகிய சேவைகளை அளித்து வருகின்றன.
இவை இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் மற்றும் விஆர்சி திட்ட அமைப்பாளர் டாக்டர் ஹெக்டே அவர்களால் டெக்கான் க்ரானிகிள்- இக்கு பேட்டி ஒன்றில் சொல்லப்பட்டது.

நல்ல சேதி 31-01-2008

தினமலர்- புதுவை 31

டிசிஎம் ஸ்ரீராம் கன்சாலிடேடட் நிறுவனம் ஏற்படுத்திய கிராம பசுமைப்புரட்சி ஹார்வேர்ட் பல்கலையின் பாடமாக மாறியுள்ளது.



இந்த நிறுவனம் 1930 களில் விவசாயத்தில் பெரும் ஆர்வம் காட்டியது. குறிப்பாக கரும்பு. 1966 இல் உர உற்பத்தி. 1997 இல் ஸ்ரீராம் க்ருஷி விகாஸ் கைட்ஸ் என்ற திட்டம் துவக்கப்பட்டது. இதன் படி சில்லரை விற்பனை நிலையங்கள் அமைக்கப்பட்டன. விவசாயத்துறை நிபுணர்கள் அந்த பகுதிக்கு அமைக்கப்பட்டனர். இவர்கள் எல்லா விவசாய பிரச்சினைகளிலும் உதவினர்.

இதைத்தொடர்ந்து மகசூல் அதிகரித்தது. விளை பொருட்களும் நியாயமான விலையில் கிடைத்தன. விவசாயிகளின் இலாபமும் அதிகரித்தது.

கடந்த ஆண்டு உலக வங்கி கூட்டத்தில் இத்திட்டத்தைப்பற்றி அறிந்த ஹார்வேர்ட் பல்கலை பேராசிரியர் ஒரு குழுவுடன் நேராக இந்தியா வந்து ஆராய்ந்து பின் இதை ஒரு பாடமாக ஆக்கியுள்ளார்.

நல்ல சேதி 31 ஜனவரி 2008

விவசாயிகளுக்கு உதவ ஹை டெக் பரிசோதனை நிலையம் சென்னையில் துவக்கப் பட்டுள்ளது. காஞ்சி, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயனடைய உள்ளனர். புத்தம்புது தொழில் நுட்பத்துடன் நேஷனல் அக்ரோ பவுண்டேஷன் (என்ஏஎஃப்) துவங்கியுள்ள பரிசோதனை நிலையம் திசு வளர்ப்பு நாற்றுகளை வழங்க உள்ளது. இது வருடம் 20 லட்சம் நாற்றுகளை உற்பத்தி செய்யும். விவசாயிகளின் வருமானம் அதிகரிக்க வாய்ப்பு அதிகம் உள்ளது.

டெக்கான் க்ரானிகிள்

நல்ல சேதி2, 29-01-2008

ஆந்திர நடிகர் டாக்டர் ராஜசேகர் சமீபத்தில் நிருபர்களிடம் பேசும்போது ஒரு கருத்து தெரிவித்தார். சமீபத்தில் அரசியலில் குதித்த நடிகர் சிரஞ்சீவிக்கு "அனுபவம் போதாது" என்றும் "அவர் கட்சி துவக்கினாலும் நான் அதில் சேர மாட்டேன்" என்றும் கூறினார். இதனால் ஆத்திரமடைந்த "சிரஞ்சீவியின் ரசிகர்கள்" சிலர், ராஜசேகர் தன் குடும்பத்துடன் ரயில் நிலையத்திலிருந்து காரில் வீட்டுக்கு திரும்பும் போது உருட்டுக்கட்டை போன்ற ஆயுதங்களால் தாக்கினர். காயமடைந்த ராஜசேகர் குடும்பத்தினர் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு சிகித்சை பெற்றனர்.

நல்ல சேதி இங்குதான் வருகிறது.

இதை கேள்விப்பட்டு சிரஞ்சீவி ராஜசேகரின் வீட்டுக்குச் சென்று நலம் விசாரித்தார். பின்னர் வெளியே வரும்போது நிருபர்களிடையே பேசும்போது "துரதிஷ்டவசமான இந்த சம்பவத்துக்கு நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்படி ஒரு சம்பவம் நடந்திருக்கக்கூடாது. எவருக்கும் தங்கள் உணர்வுகளை வெளிப்படுத்த முழு உரிமை ஜனநாயகத்தில் உண்டு. இந்த செயலில் யார் ஈடு பட்டிருந்தாலும் வன்மையாக கண்டிக்கிறேன்" என்றார்.
இது ஒரு செட் அப் இல்லை என்றே நம்புவோம்!

தினமலர் புதுவை 29-01-2008 பக்கம் 9

நல்ல சேதி1 29-01-2008

பிரிட்டனில் கேரள உணவு வகைகள் பெரிதும் பிரபலமடைந்து வருகின்றன. பக்கிம்காம் அரண்மனைக்கு அருகில் உள்ள கொல்லம் என்ற உணவகத்துக்கு சர்வ தேச விருது கிடைத்துள்ளது. டாவோசில் நடந்த சர்வ தேச பொருளாதார கூட்டமைப்பில் பங்கேற்றவர்களுக்கு இந்த உணவு விடுதியின் உணவு பரிமாறப்பட்டது. இதன் தலைமை அதிகாரி அயலூர் ஷ்ரிராம் நேரடியாக இதை மேற்பார்வையிட்டார். அப்போதுதான் அந்த செய்தி வந்தது. சர்வ தேச அளவில் பெரிதும் கௌரமாகக்கருதப்படும் "தி மிச்செலின் கைடு டொ தெ கிரேட் பிரிட்டன் அண்டு அயர்லாந்து - 2008” என்ற விருது கொல்லம் விடுதிக்கு கிடைத்துள்ளது. தாஜ் குழுமம் இதை நடத்தி வந்தாலும் ஷ்ரிராம்தான் முழுக்க முழுக்க கவனித்துக்கொள்கிறார். இஙிலாந்து செல்லும் பாலிவுட் நக்ஷத்திரங்கள் விரும்பி சாப்பிடும் இடம் இதுவாகும். ஏற்கெனவே இந்த விருது பெல்கிரேயாவில் உள்ள, மைபேரில் உள்ள தமரிந்த், வினீத் பாட்டியா ரசோய் ஆகிய உணவு விடுதிகளுக்கும் கிடைத்துள்ளது.

-தினமலர் புதுவை 29-01-2008 பக்கம் 16

மற்றவர் பங்களிப்பு

25-8-2006 இல் பஞ்சாபில் பல பிஹாரி தொழிலாளிகள் கட்டாய அடையாள அட்டை மற்றும் உழைக்க பெர்மிட் ஆகியவற்றை எதிர்த்து போராட, லூதியானாவில் போலீஸுடன் கைகலப்பு ஏற்பட்டு பலர் காயமுற்றனர். நிதிஷ் உடனடியாக பஞ்சாபில் அப்போது முதல் மந்திரியாக இருந்த அமரிந்தர் சிங் உடனும் உள்துறை இலாகா மந்திரி சிவராஜ் பாடிலுடனும் பேசினார். பிஹார் எம் எல் ஏக்கள் 3 பேர் அடங்கிய குழு உடனடியாக லூதியானாவுக்கு அனுப்பப்பட்டது. அவர்கள் உள்துறை மற்றும் போலீஸ் அதிகாரிகளுடன் பேசினார்கள். வேலை பெர்மிட் உத்தரவு இரத்து செய்யப்பட்டது. பிரச்சினை எவ்வளவு விரைவாக தீர்க்கப்பட்டது எனில் நாட்டில் இது முதல் பக்க பத்திரிகை செய்தியாகக்கூட ஆகவில்லை. எப்படி உடனடி தெளிவான முடிவுகளை தலைமை எடுப்பதால் மோசமான விளைவுகள் தடுக்கப்படலாம் என்பதற்கு இது ஒரு உதாரணம்.



பஞ்சாமிர்தம் என்ற குழு மடலில் இருந்து.

நல்ல தொடுப்பு

இந்தக் கால இளைஞர் சமூகத்திற்கு எதையாவது வித்தியாசமாகச் செய்யாவிட்டால் தூக்கமே வராது போலிருக்கிறது. சதா அனுதினமும் எதாவதொரு தேடலுடன்தான் தங்களுடைய வாழ்க்கையை நகர்த்திக் கொண்டிருக்கிறார்கள். பணம் பண்ணுவது என்று மட்டும் இவர்கள் தங்களுடைய வாழ்க்கையைக் குறுக்கிக் கொள்வதில்லை. கைக்காசைச் செலவழித்தாவது தங்களுடைய தேடலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறார்கள்.

வயது 35 நெருங்கினாலும் பாலாஜி இன்னும் இளைஞராகவே வலம் வருகிறார். இவருடைய சாதனைகளும் யாரும் தொட்டிராத தளத்தில் இளமையாகவே வலம் வருகின்றன.

யார் இந்த பாலாஜி? 'ஜி' என்று அனைவராலும் மதிப்புடன் அழைக்கப்படும் ஓவியர் மற்றும் ஓவியத் துறை சார்ந்த பல்துறை வித்தகர். திண்டுக்கல்லைப் பூர்வீகமாகக் கொண்ட பாலாஜி என்னும் 'ஜி' தற்போது TVS நிறுவனத்தில் பணிபுரிகிறார்.

நாம் அன்றாடம் பயன்படுத்திவிட்டு உபயோகமில்லை எனக் கருதித் தூக்கி எறியும் கோழியிறகு, களிமண், துணி, பஞ்சு, சாக்பீஸ் துண்டுகள், குட்டைப் பென்சில்கள், மரக்கிளைகள் போன்ற கழிவுப் பொருட்களிலிருந்து கலைப் பொருட்களை உருவாக்குகிறார்...........

மேலும் படிக்க http://www.aaraamthinai.com/samugam/oorvalam/Jan08/01oorvalam405.asp

நல்ல சேதி-2- 22-1-2008

சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' விழா. இந்தியாவை மாற்ற கலாம் காட்டினார் புதிய வழி:
இளைஞர்கள் தொழில் முனைவதற்கு ஏற்படுத்தப்பட்டுள்ள சிறகு பவுண்டேஷன் இன் 'இணைந்து நாம் 99' திட்டத்தை துவக்கி வைத்து பேசினார் கலாம்.
"பொறுப்பான, வெளிப்படையான ஊழலற்ற ஆட்சி முறை நிர்வாகம் அமைந்த நாடாக இந்தியாவை மாற்றுவோம் என்றார் கலாம்.....என் வாழ்க்கையை குறும்படமாக எடுத்துள்ளனர். மற்றவர் என்னை உதாரணமாக கொள்ள வேண்டும் என்று நான் விரும்பவில்லை. ஆனாலும் ஒரு சில ஆத்மாக்களாவது உத்வேகம் பெறக்கூடும்; ஆன்மீகம் உணர்ந்த நிறைந்த வாழ்க்கையில் தான் முழு திருப்தி காண இயலும் என்ற சம நிலைக்கு வரக்கூடும் என நான் நம்புகிறேன்....மன எழுச்சி அடைந்த 54 கோடி இளைஞர்கள் இந்தியாவின் மிகப்பெரிய சொத்து. நாட்டின் சவால்களை சமாளிக்க நமது இளைய தலைமுறையினர் எழுச்சி பெற வேன்டும். கல்வி நிறுவனங்கள் மாணவர்களின் ஆராயும் மற்றும் சிந்திக்கும் திறனை வளர்க்க வேண்டும்.

சிறகு பவுண்டேஷன் இன் திட்டத்தின் கீழ் 99 இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பயிற்சி தரப்படும். சர்வ தேச தரத்தில் இந்தியாவிலிருந்தும் மற்றும் உலகளாவிய நிறுவங்களுடன் ஒப்பந்தம் செய்து கொள்ளப்பட்டு இது நிறைவேற்றப்படும்..... தேவையான செய்முறை பயிற்சி அருகில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் மூலம் அளிக்க வேண்டும்...”

மேலும் தகவல்களுக்கு தினமலர் 22-1-2008 புதுவை பக்கம் 5

நல்ல சேதி-1- 22-1-2008

கழுத்தில் தாலி; கையில் பாட புத்தகம்.
அனைவருக்கும் கல்வி திட்டத்தின் கீழ் கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்யாலயா என்ற கல்வி திட்டத்தை கர்நாடக அரசு அறிமுகப் படுத்தியது. ஆதி திராவிடர், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர்களில் கல்வி அறிவு இல்லாத பெண் குழந்தைகள் குறித்து வீடு வீடாக ஆய்வு நடத்தப்பட்டது. அவர்கள் நிலைக்கு ஏற்ப 6, 7 அல்லது 8 ஆம் வகுப்புகளில் சேர்க்கப்பட்டனர். மொத்தம் 5,600 பேர். அவர்களில் 64 பேர் திருமணம் ஆனவர்கள் என தெரிய வந்தது. இவர்களுக்கு கல்வி அறிவு தருவதைப்பற்றி மட்டும் கவனம் செலுத்தப்படும்; அவர்கள் மண விஷயத்தை ஆலோசிக்கப்போவதில்லை; அது அவர்கள் படிப்பை பாதிக்கலாம் என தெரிவிக்கப்பட்டது.

தினமலர் 22-1-2008 புதுவை பக்கம்2