சமூக நல்லிணக்கம்

அலகாபாத்: உ.பி., மாநிலத்தை சேர்ந்த முஸ்லிம் பெற்றோர், தங்கள் மகளுக்கு இந்துமத முறைப்படி திருமணம் செய்து கொடுத்தனர். உ.பி., மாநிலம் அலகாபாத்தை சேர்ந்தவர் குலாம் முகமது. இவரது மனைவி ரஷிதா பேகம். முஸ்லிம் மதத்தை சேர்ந்த இவர்களுக்கு, பெண் குழந்தை இல்லை. இதனால், 14 ஆண்டுகளுக்கு முன், சரீந்தர் யாதவ் என்ற இந்து மதத்தை சேர்ந்தவரின் பெண் குழந்தையை, தத்தெடுத்து வளர்த்தனர். அந்த குழந்தைக்கு பபிதா என பெயரிட்டு, மிகுந்த பாசத்துடன் வளர்த்து வந்தனர். காலச் சக்கரம் வேகமாக உருண்டோடியது. பபிதாவிற்கு திருமண வயது வந்தது. திருமணம் செய்ய முடிவு செய்தனர். அப்போது, அவர்களுக்கு புதுக் குழப்பம் ஏற்பட்டது.

பபிதாவிற்கு, முஸ்லிம் மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பதா, என்பதே அந்த குழப்பம். இறுதியில், இந்து மதத்தில் மாப்பிள்ளை பார்ப்பது என முடிவு செய்தனர். மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமடைந்தது. ஆனால், குலாம் முகமது நினைத்தது போல், அது, அத்தனை எளிதான காரியமாக இல்லை. முஸ்லிம் வீட்டில் வளர்ந்த பபிதாவை, திருமணம் செய்ய, இந்து மதத்தினர் தயக்கம் காட்டினர்.
இறுதியில், பராவுலி கிராமத்தை சேர்ந்த கங்கா பிரசாத் யாதவ் என்பவர், தனது மகன் பப்லுவுக்கு, பபிதாவை திருமணம் செய்ய முன்வந்தார். திருமண வேலைகள் வேகமாக நடந்தன. முழுக்க முழுக்க, இந்து மத சடங்கு மற்றும் சம்பிரதாயங்களை பின்பற்றி திருமணம் செய்ய முடிவு செய்யப்பட்டது. திருமண பத்திரிகையின் அட்டையில், விநாயகர் படத்தை அச்சிட்டு, தனது உறவினர்களுக்கு வினியோகம் செய்தார், குலாம் முகமது.
இந்துமத சம்பிரதாயப்படி திருமணம் நடந்தது. முஸ்லிம்-இந்து மதத்தை சேர்ந்தவர்கள் இணைந்து வந்திருந்ததால், திருமணப் பந்தல் நிரம்பி வழிந்தது. திருமணம் முடிந்து, பபிதாவை மாப்பிள்ளை வீட்டுக்கு வழி அனுப்பி வைக்கும் போது, குலாம் முகமது-ரஷிதா பேகம் தம்பதியினர், பிரிவுத் துயர் தாங்காது, கண்ணீர் விட்டு கதறி அழுதனர். இதுபற்றி குலாம் முகமது கூறுகையில்,"இது, எனது மகளின் திருமணம். ஒரு தந்தை, தனது மகளுக்கு, செய்ய வேண்டிய கடமையை நிறைவேற்றியுள்ளேன். இதை, புதுமையாக நான் கருதவில்லை' என்றார். சமூக நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையிலான இந்த திருமணத்திற்கு, அனைத்து தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர்.
நன்றி தினமலர்.காம்

3 மறுமொழிகள்:

கீதா சாம்பசிவம் சொல்வது:

attendance only.

திவா சொல்வது:

நன்றி! பதிவே காணோமே என்கிறீங்க. புரியுது.
இப்ப கோடை விடுமுறை. அதனால வேலை அதிகம். பார்க்கிறேன்.

கீதா சாம்பசிவம் சொல்வது:
This comment has been removed by a blog administrator.