வலைப்பூக்களுக்கு புதுசுனா

சரி எப்படியோ இங்க வந்துட்டீங்க. கொஞ்சம் தலைகால் புரியலே இல்ல?
ஏதேனும் படிக்கிறீங்க. அட, இது நல்லாயிருக்கேன்னு தோணுது. (சும்மா ஒரு பேச்சுக்குதான்!) அத பத்தி ஒரு விமர்சனம் எழுத தோணுது. (ஏண்டா உனக்கு வேற வேலை இல்லையா, ஐயா நான் பார்த்த வலைப்பூக்களிலேயே இதுதான் பிரமாதம்! இப்படி ஏதோ ஒண்ணு) என்ன செய்யறது?
நீங்க படிச்ச பத்தி கீழேயே காமென்ட்ஸ் அப்படி தெரியுது பாருங்க. அது மேலே சொடுக்கினா (அதாங்க மவுஸால கிளிக் பண்ணா) அடுத்து ஒரு பக்கம் வரும். மத்தவங்க திட்டினது பாராட்டினது எல்லாம் அங்க இருக்கும். அது பாட்டுக்கு வால் மாதிரி (க்கும்) போய்கிட்டே இருந்தாலும் கவலைபடாம வலது பக்கம் பாருங்க. அங்க ஒரு பெட்டி தெரியுதா? மேலே ஆங்கிலத்துல லீவ் யுவர் காமென்ட்ஸ் அப்படி போட்டிருக்கே. அந்த பெட்டில உங்க விமர்சனத்தை உள்ளிடுங்க. தமிழ்ல எழுதறது நல்லது. அதுக்கு ரொம்ப கஷ்டப்பட வேணாம். முதல் பக்கமே தமிழில் தட்டச்சி பின்னூட்ட ன்னு ஒரு தொடுப்பு கொடுத்திருக்கேனே. அங்க போய் சுலபமா தமிழ்ல எழுதலாம். ammaa ன்னு அடிச்சா "அம்மா" வந்துடும். அப்புறம் அத பிரதி எடுத்து ஒட்ட... அதாங்க காபி பேஸ்ட் .. பண்ணிடலாம்.
மத்தபடி இடது பக்கம் முதல்ல என் இன்னொரு வலைப்பூக்கான தொடுப்பு, கீழே இந்த வலைப்பூல இருக்கற மத்த பதிவுகள் தலைப்புவாரியாக, ஏன் இந்த வலைப்பூ ங்கற ரகசியம், இன்னும் கீழ இதுவரை பதிவு செய்தன் எல்லாம் தேதிவாரியாக, அப்புறம் அடியேனின் சிறு விவரம். அவ்வளவுதாங்க. இதுவரைக்கும் படிச்சதுக்கு நன்றி!

நல்ல தொடுப்பு

http://tinyurl.com/34u7q7பு
வலைப்பக்கம் ஆங்கிலத்தில். உற்சாகம் தரும் சில நிகழ்வுகள்.

இந்த வலைப்பூக்கு சமர்ப்பிக்க விதிகள்

எல்லா செய்திகளுக்கும் ஒரு அத்தாட்சி வேண்டும். தினசரி மற்ற ஊடகங்களானால் வலை தொடுப்பு இருப்பின் சமர்ப்பிக்கவும். அல்லது "தினமலர் 12-1-2007 தேதி நெல்லை பதிப்பு" போன்ற தகவல் இருக்க வேண்டும். சமர்ப்பிக்கும் செய்தி உண்மையானது என உறுதி கூற வேண்டும்.
தரப்படும் தகவல் தணிக்கைக்கு உட்பட்டது. தணிக்கைக்கு சம்மதம் இல்லையானால் சமர்ப்பிக்காதீர்கள்.
தணிக்கைக்கு காரணம் தரப்பட மாட்டாது.
தரப்படும் தகவல்கள் அனைத்தும் வெளியிடப்படும் என்று உறுதி ஏதும் இல்லை. இதற்கு காரணமும் தரப்பட மாட்டாது.
வெளிட்ட தகவல் தவறு என தெரிய வந்தால் அது நீக்கப்படும்.
வெளியிட உங்கள் புனை பெயர்களை தரலாம், ஆனால் உண்மை பெயரும் தரப்பட வேண்டும்.
இந்த சமர்ப்பிப்போர் பெயர் தேவையிருந்தால் மட்டுமே வெளியிடப்படும்.

இந்தியா ஒளிர்கிறது!

இந்த தலைப்பு நிறைய பேருக்கு பிடிக்காதது என்று தெரியும். ஆகவே முதலில் இது எந்த கட்சியை சார்ந்தும் இல்லை என்று சொல்லி விடுகிறேன்.

நமக்கு இரண்டு தேர்வுகள் உள்ளன.
துரியோதனன் போல கெட்டதையே பார்க்கலாம்.
அல்லது தருமன் போல நல்லதையே பார்க்கலாம்.
அல்லது எதார்த்தமாக பார்க்கலாம்.

ஊடகங்கள் வியாபாரமாக இயங்க மக்களின் மலினமான உணர்வுகளுக்கு தீனி போடுகின்றன. அப்போதுதானே நிறைய பேர் படிப்பார்கள்! அதனால் அவை தரும் செய்திகள் ஒரு மாதிரிதான் இருக்கும்.

எதார்த்தமாக பார்க்கும்போது நாம் பல விஷயங்களில் முன்னேறிக்கொண்டுதான் இருக்கிறோம். அவற்றுக்கு அரசாங்கங்கள் காரணம் என்று குறை சொல்ல முடியாது. முன்னேறம் மக்களால்தான் ஏற்படுகிறது. அரசுகள் ஒரு ஊக்கியாக மட்டுமே இருக்க முடியும். முன்னேற மக்களுக்கு முதலில் ஒரு தன்னம்பிக்கை தேவை. "ப்ளடி இன்டியா" என்று நினைக்கும்வரை நாம் முன்னேற முடியாது. அதற்குத்தான் இந்த தலைப்பு.

தப்பித்தவறி ஊடகங்களில் சில நல்ல விஷயங்கள் வந்து விடுகின்றன. இவை இந்தியாவின் ஏதோ ஒரு அங்கம் முன்னேறியதை காட்டும். அவற்றையும்தான் தெரிந்து கொள்ளலாமே!

--------------
வெளி நாடுகளில் இருந்து இந்தியா எல்லாவற்றையும் இறக்குமதி செய்த காலம் போயே போச்! திசம்பர் 12 ஆம் தேதியிட்ட செய்திகள் மஹீந்திரா ஸ்கார்ப்பியோ வண்டிக்கு வெளிநாடுகளில் நல்ல மார்க்கெட் இருக்கிறது என தெரிவிக்கின்றன. அமெரிக்காவில் 285 இடங்களில் அவை விற்கப்பட உள்ளன. 45,000 வண்டிகளுக்கு இப்போதே ஆர்டர்கள் உள்ளன.

நல்ல அனுபவம்!

சில வருடங்களுக்கு முன் எனக்கு நிகழ்ந்தது.
என் மகனை சென்னையில் தனியாரிடம் கல்வி பயில சென்னை கொண்டு அமர்த்தினேன். ஒரு சிறு உறைவிடம் வாடகைக்கு எடுத்தோம். மாலை கடையில் பொருட்கள் வாங்கி அதிகம் பழகாத மகனுக்கு ஒரு அனுபவம் வருவதற்காக மயிலை குளத்தருகே கடை வீதி சென்றோம். காய்கறி வாங்க தெருவோரம் இருந்த ஒரு எளிய கிழவியிடம் சென்று அமர்ந்தோம். பெரிசா விலை பேசி வாங்க தெரிந்தவன் போல "இது எவ்வளோ? அது எவ்வளோ" என்றெல்லாம் விசாரித்தோம். கடைசியில் தேவையான அளவு காய்கறி எடுத்துக்கொடுத்து "எடை போட்டு கொடுமா" என்றோம். (எவ்வளவு வேண்டும் என்று எடையில் சொல்லத் தெரியாதே!) சரி எவ்வளவு ஆச்சு? என்றோம். அதற்குள் மனசில் கணக்கு போட்டு 15 ரூபாய் வந்தது என்று தெரிந்து விட்டது. "பதினஞ்சு ரூபா சாமி." 20 ரூபாய் நோட்டு ஒன்றை நீட்டினோம். கிழவி மீதியாக 8 ரூபாய் கொடுத்தாள். ஓ கணக்கு தெரியவில்லையோ? எப்படிமா என்று ஆரம்பிக்க கிழவி சிரித்துக்கொண்டே "இது போதும் சாமி!" என்றாள்!
கணக்கு தெரிந்துதான் இருக்கிறது. எப்படியும் பேரம் பேசுவார்கள் என்று விலையை சற்று உயர்த்தி சொன்னாள். பேரம் பேசவில்லை என்று தெரிந்ததும் அவள் மனதில் நிர்ணயித்து இருந்த விலை மட்டும் எடுத்துக் கொண்டாள். கூடுதலாக கிடைக்க இருந்த பணத்தை ஏற்க தயாராக இல்லை.
ஏழ்மையிலும் செம்மை!

இன்றைய நல்ல சேதி 12-12-2007

மிலிட்டிரி அகடமி தேர்வில் சாதித்த "டப்பா பாய்" என்று தலைப்பிட்டு தின மலர் (தேதி 12-12-2007புதுவை பதிப்பு) தன் 9ஆம் பக்கதில் தரும் செய்தி: மகாராஷ்ட்ர மாநிலத்தில் புனே நகரில் வாழும் பூபால் வசந்த வாக், 18 வயது; பள்ளியில் எல்லா ஆண்டுகளும் முதல் ரேங்க். குடும்பமோ ஏழ்மையில்; அதனால் பள்ளி இறுதி தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்கியும் மேற்கொண்டு படிக்க முடியவில்லை. பக்கத்தில் ஒரு கம்பனியில் வேலைக்கு சேர்ந்து கூடவே மருத்துவ இஞ்சினீரிங் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கு மதிய உணவு டிபன் பெட்டிகளை கொண்டு தரும் வேலையையும் செய்து வந்தார்.
இருந்தாலும் ராணுவத்தில் சேர்ந்து பெரிய அதிகாரியாக வர வேண்டும் என்ற கனவில் உழைத்து டேராடூன் "இந்திய மிலிட்டிரி அகடமி" நடத்திய தேர்வு எழுதி வெற்றி பெற்றது மட்டும் இல்லாமல் அதிக மதிப்பெண் பெற்று சாதித்தார். உள்ளூர் மக்கள் கூடி மாலை அணிவித்து வாழ்த்தினர்.

என்னை உருவாக்கிய நல்ல மனிதர்கள்

நம் வாழ்கையில் பல பேர் வந்து போகிறார்கள். சிலர் நம்மில் ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களிடமிருந்து சில நல்ல பண்புகளை நாம் கற்கிறோம். காலச்சக்கரம் ஓடுகிறது. பின் இவர்களை நினைத்துப்பார்க்கிறோமா?
நான் நினைத்துப்பார்க்கிறேன்.
-----------------------------
மருத்துவ கல்லூரியில் சேர்ந்து ஒண்ணும் புரியாத சூழ்நிலை. மாலையில் விடுதி அருகில் சென்று கொண்டு இருந்தபோது ஒருவர் அழைக்கிறார். சீனியர் ஆயிற்றே! பயத்துடன் செல்கிறேன். அவர் முகத்திலோ சிரிப்பு. "என்ன பண்ணுகிறாய்? சும்மா இருந்தா என்னுடன் கோவிலுக்கு வருகிறாயா" என்கிறார். மகிழ்ச்சியுடன் உடன் செல்கிறேன். மற்றவர்கள் மாதிரி இவர் மிரட்டி உருட்டவில்லை. அன்புடன் விசாரிக்கிறார். கோவில் சென்று பின் உணவருந்த செல்கிறோம். அடுத்த நாளும் அதே நேரம் கூப்பிட இது பழக்கமாகிப்போகிறது. பின்னால் விடுதியிலேயே நடக்கும் பஜனை ஒன்றுக்கு செல்கிறார் என அறிந்து கூடப்போகிறேன். என் ஆன்மீக தேடல் இப்படி ஆரம்பித்தது அவரால்தான். என்னுடன் என் சக மாணவன் ஒருவனும் வருகிறான். எங்களுக்கு சிஷ்யா லாங்கஸ், சிஷ்யா ப்ரெவிஸ் என பட்டப்பெயர்கள் சூட்டப்படுகின்றன. (இன்றைக்கும் அவரது சக மாணவர் மாதவனை நான் காணும் போதெல்லாம் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) ராகிங் எல்லாம் முடிந்து பின் விளையாட்டு மைதானம் போகும் போது அங்கும் அவரை பார்க்கிறேன். முன் பின் தெரியாத கூடைப்பந்து விளையாட்டை அவரிடம் கற்கிறேன். கிரிக்கெட், கூடைப்பந்து ஆகிய களங்களில் ஒன்றாகிறோம். தினசரி விளையாட்டு; முடித்து குளியல் சில நிமிடங்களில்; கோவில்; உணவு விடுதியில் ஓபனிங்க் பாட்ஸ்மென்! இப்படி பழகிப்போகிறது.
கல்லூரி பருவ வாழ்க்கையை உருப்படியாக அமைத்துக்கொடுத்த கே.எஸ்.ஸ்ரீதர் இப்படித்தான் அறிமுகமானார்.
அவரைப்போல பன்முக திறமைசாலியை இன்றுவரை நான் காணவில்லை. எளிய புத்தகங்களே படிப்பார். ஆனால் தலையணை போன்ற புத்தகங்கள் படிப்பவரைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பார். தொடர்ந்து வகுப்பு தேர்வுகளில் முதலிடம். விளையாட்டு மைதானத்திலோ கிரிக்கெட், ஹாக்கி, கூடைப்பந்து என துவங்கி எந்த விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. மூன்றாம் வருடம் விளையாட்டு காரியதரிசியானார். ஸ்போர்ட்ஸ் டே நடந்தது. இவர் எழுதிவைத்த ஆண்டு அறிக்கையை யாரிடமோ தந்து வைக்க அவர் காணாமல் போனார். நேரம் வந்தபோது படிக்க அறிக்கையை காணோம்! சற்றும் தயங்காமல் மேடையில் ஏறி தான் எழுதியதை கிடு கிடு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். பின்னால் அறிக்கை பிரதி கிடைத்து சரி பார்த்தபோது ஒரு வரி மட்டுமே விட்டுப்போயிருந்தது!
சகாக்களுடன் அரட்டையில் நேரத்தை செலவிட்ட என்னை நூலகம் சென்று இடையூறில்லாமல் படிக்கும் பழக்கம் இவர் ஏற்படுத்தியதுதான். மகா கோபசாலியான நான் மற்றவர்களுடன் அன்புடன் பழகுவதை இவரிடமே கற்றேன். ஒருநாள் விளையாட்டு முடிந்து திரும்பும்போது மற்றொருவருடன் கைகலப்பு ஏற்பட்டு அடி வாங்கினேன். (அந்த ஆசாமி குத்துச்சண்டை வீரர் என்ரு அப்புறம்தானே தெரியும்!) இதைப்பற்றி கேள்விப்பட்ட இவர் நீ ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார். சாது என்றால் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை எதிர்த்து நிற்கவேண்டும் என்பது கற்றேன். நோயாளிகளை பார்க்கவே தயங்கிவனை இழுத்துப்போய் அவரது வார்டில் உள்ள நோயாளிகளை காட்டி நோயைப்பற்றி சொல்லுவார். இவரிடம் நான் கற்றதை பட்டியல் இடுவது கடினம்.
கல்லூரி இறுதி வருட தேர்வில் இவரது பேராசிரியர் எக்ஸாமினரிடம் வந்து இவர் தங்கப்பதக்கம் வாங்க வேண்டியவர். சோதனை பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்! அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரம் கேள்விகள் பறக்க கடைசியில் தங்கப்பதக்கம் இவருடையதாயிற்று! மற்ற மாணவர்கள் போல் அந்த காலத்தில் பிரசித்தமாக இருந்த ஈசிஎஃப்எம்ஜி தேர்வு எழுதி ஓஹையோ சென்று மருத்துவ மேல் படிப்பு படித்தார். இந்தகாலக் கட்டத்தில் இவருடன் தொடர்பு இழந்தேன். அந்த காலத்தில் வீட்டு கணினியே கிடையாது. அப்புறம்தானே மின்னஞ்சல். தொலைபேசி கட்டணங்கள் மிக அதிகம். கடித போக்குவரத்து சில வாரங்கள் ஆகும். ஆனால் நாம் போடும் கடிதங்களுக்கு கட்டாயம் பதில் வரும். பின்னர் தில்லி போய் நான் மேல்படிப்பு முடித்து சொந்த ஊரில் நிலையானேன். இடை இடையே கல்லூரி பழம் மாணவர் தின விழாவுக்கு வருவார். தகவல் பரிமாறிக்கொள்வோம். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடு பட்டு இருக்கிறார் என தெரியவந்தது. ஒரு நாள் திடுதிப்பென்று என் நண்பனுடன் வந்தார். சிதம்பரம் போக வேண்டுமென்றார். ஒரு வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு சென்று வந்தோம். வாடகை வண்டி குறித்த சிறு சிக்கலை தீர்த்துவிட்டு வருவதற்குள் இருவரும் உணவருந்தி விட்டு புறப்பட தயாராகிவிட்டனர். உடனே சென்னை கிளம்பிவிட்டனர். அப்போதுதான் அவரை கடைசியாக பார்த்தது.
ஆறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் சிஷ்யா ப்ரவிஸ் உடன் பேசிக்கொண்டு இருந்தபோது "நம் ஸ்ரீதர் இறந்து போனது தெரியுமோ?” என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். மீஸோதீலியோமா குறித்து ஆராய்ச்சி செய்த அவர் லிம்ஃபோமா/ இரத்த புற்றுநோய் பாதிக்க இறைவனடி சேர்ந்தார் என்று தெரிய வந்தது. சிதம்பரம் போக வேண்டும் என வந்தபோதே பாதிப்பு இருந்திருக்கிறது. அதுபற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
இந்த கட்டுரை எழுத உட்கார்ந்தபோது சும்மா அவர் பெயரை கூகுள் இல் இட்டுப்பார்த்தேன்.
ஆச்சரியம்! அவரது ஆராய்ச்சி பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.
http://www.mesotheliomascience.org/showauthor.php?surname=Sridhar&initials=KS

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அவரது மகள் தேவி ரோட்ஸ் ஸ்காலர் என தெரிகிறது. அவர் முகத்தில் அதே ஸ்ரீதர் சிரிப்பு!
http://www6.miami.edu/veritas/feb2003/fp/fpstory2.html
http://www.hindu.com/yw/2004/01/17/stories/2004011700120200.htm

செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி!

செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி!
இந்திய ரயில்வேயில் பயணம் செய்ய சீட்டு முன்பதிவு 2 மாதங்களுக்கு முன் செய்ய முடிகிறது. ஆனால் ஏதும் காரணமாக அதை இரத்து செய்ய வேண்டுமானால் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் சிக்கலாக இருந்தன. இவற்றை எளிமையாக்கி ஐந்து நாட்களில் பயணச்சீட்டு பதிவு எய்த இடத்தில் பணத்தை திருப்பி பெற்றிக்கொள்ள ரயில்வே துறை நடைமுறைகளை மாற்றி உள்ளது.
இப்படி தினமலரில் (புதுவை பதிப்பு) 2 ஆம் பக்க செய்தி தெரிவிக்கிறது.
வேறு நல்ல செய்தி ஏதும் காணோம்!

தமிழகத்தை சேர்ந்தவர் சாதிக்கிறார்!

தினமலர் 10-12-2006 புதுவை பதிப்பு பக்கம் 2

காட்டில் சுள்ளிகளை சேகரித்து பெற்றோர் விற்க அந்த பணத்தில் படித்து சாதித்து அமெரிக்காவில் நிறுவனம் நடத்தும் தமிழகத்தை சேர்ந்தவர், அங்குள்ல பிரபல மருத்துவ மனைகளில் சுகாதார பணி செய்ய இந்தியாவில் தலித்துகளை தேர்ந்தெடுத்து வருகிறார் என ஆரம்பிக்கும் இந்த செய்தி மேலும் தரும் தகவல்கள்: நபர்: மைக்கேல் தேவர். பெற்றோர் விவசாய கூலிகள். பிழைப்பு தேடி கர்நாடகாவில் குடியேற்றம். மலை கிராம பள்ளியில் படித்து பல கஷ்டங்களுக்கு இடையே கல்லூரி படிப்பு முடித்து தனியாக சுகாதார சேவை நிறுவனம் அமைத்தார். அமெரிக்காவில் உள்ள சுகாதார நிறுவனங்கள் தொடர்பு கிடைத்து அங்கு சென்று "டெம்ப் சொலூஷன்ஸ்" என்ற நிறுவனம் துவக்கினார்.
சிகாகோ பிலடல்பியா உட்பட பல நகர மருத்துவ மனைகளுக்கு நர்சுகள் தெரபிஸ்டுகள் போன்ற சுகாதார பணியாளர்களை வேலைக்கு அமர்த்துவதே இவர் பணி. மேலும்... மேலே என்ன? தினமலர் ஈ பதிப்பில் படியுங்களேன்!

இதையும் பாருங்க. உண்மைதானே? http://www.tempsolutionsinc.com/contactus/contactus.html

நல்வரவு!

நேற்று பாண்டிச்சேரியில் நடை பெற்ற பதிவர் பட்டறைக்கு சென்றிருந்தேன். அங்கு ஸ்ரீ சிவகுமார் அறிமுகமானார். அவருடன் உரையாடியபோது பொதுவாக வலைப்பூக்களில் சண்டை சச்சரவுகளே காணப்படுகின்றனவே என்று வருந்தினேன். அவர் பதிலாக நாம் எதைப்பார்க்கிறோம் என்பது நம் கையில் இருக்கிறது. நீங்கள் நல்ல விஷயங்களை வெளியிடுங்களேன், அதுவே தீர்வு என்றார். இது மனதில் தைத்துவிட்டது. ஆகவே இதோ!

செய்தி தாள்கள்/ வலைப்பூக்கள்/ வலைப்பக்கங்களில் மற்ற ஊடகங்களில் அரிதாக பார்க்கும் நல்ல தகவல்கள், நேரில் பார்த்து அனுபவித்த நல்ல சமாசாரங்களை இங்கே வெளியிடுங்க!

தயை செய்து உண்மைத் தகவல்கள் மட்டுமே! இயன்ற இடங்களில் வலைச்சுட்டியும் தொடுப்பும் இடவும். நேரில் பார்த்த சமாசாரமானால் தங்கள் முகவரியையும் தர வேண்டும் (அது வெளியிடப்படாது)