மொழி

ஜெருசலேம் : "ஒன்றுக்கு மேற்பட்ட மொழி பேசும் குழந்தைகளின் மூளை எளிதில் மூப்படையாது' என, ஆய்வு ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல் நாட்டின் டெல் அவிவ் பல்கலைக் கழகத்தில், மூளை செயல்பாடு தொடர்பாக ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது. அந்த ஆய்வு முடிவுகள் வருமாறு: தங்களின் தாய் மொழி தவிர, இரண்டாவது மற்றும் மூன்றாவது மொழிகளை பேசும் குழந்தைகள், எதிர்காலத்தில் பல விதத்தில் பயன் அடைவர். பல மொழி பேசும், 75 வயது முதல் 95 வயதிற்கு உட்பட்ட முதியவர்கள் பலரிடம் ஆய்வு நடத்தப்பட்டது. அதில், அதிக மொழி பேசுவோரின் அறிவாற்றல் சிறப் பாக உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. முதியவர்கள் தெளிவான மன நிலையுடன் உள்ளனர். தாய் மொழி தவிர, இரண்டாவது, மூன்றாவது என பல மொழிகளைக் கற்றதே, அவர்களின் மூளை எளிதில் மூப்படையாததற்கு காரணம்.

அரிய ஓவிய கண்காட்சி

லண்டன் : கடந்த 17ம் நூற்றாண்டில், ராமாயணத்தை சித்தரித்து வரையப்பட்ட, அழகு மிளிரும் ஓவியங்கள், தற்போது, லண்டனில் கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. மேவாரைச் சேர்ந்த ராணா ஜகத் சிங் என்பவர், ராமாயண புராணக் கதையை சித்தரிக்கும், உயிரோட்டமுள்ள, அரிய வகை ஓவியங்களை வரைந்துள்ளார். இவை, 17ம் நூற்றாண்டில் வரையப்பட்டவை. இந்த ஓவியங்கள் அனைத்தும், புகழ்பெற்ற பிரிட்டிஷ் நூலக புரவலர் பிர்லா என்பவரின் உதவியுடன், லண்டனுக்கு கொண்டு வரப்பட்டன. உலகின் அரிய வகை ஓவியங்கள் மற்றும் கலை ஆகியவை, பிரிட்டிஷ் நூலகத்தில் கண்காட்சிகளாக இடம் பெறுவது வழக்கம். இந்த பெருமை, மேவாரில் இருந்து கொண்டுவரப்பட்ட ராமாயண ஓவியங்களுக்கும் கிடைத்துள்ளது. "இந்தியாவின் பெருமை மிகு இதிகாசம் ராமாயணம்' என்ற தலைப்பில், உயிரோட்டமுள்ள, இந்த ஓவியங்கள், கண்காட்சியாக வைக்கப்பட்டுள்ளன. ராமாயணத்தின் பெருமைகளை விளக்கும் வகையில், ஸ்லோகங்களும், கண்காட்சியில் ஒலிபரப்பப்படுகிறது. வரும், செப்டம்பர் 14 வரை, இந்த கண்காட்சி நடக்கிறது.