என்னை உருவாக்கிய நல்ல மனிதர்கள்

நம் வாழ்கையில் பல பேர் வந்து போகிறார்கள். சிலர் நம்மில் ஒரு நல்ல மாற்றத்தை உண்டு பண்ணுகிறார்கள். இவர்களிடமிருந்து சில நல்ல பண்புகளை நாம் கற்கிறோம். காலச்சக்கரம் ஓடுகிறது. பின் இவர்களை நினைத்துப்பார்க்கிறோமா?
நான் நினைத்துப்பார்க்கிறேன்.
-----------------------------
மருத்துவ கல்லூரியில் சேர்ந்து ஒண்ணும் புரியாத சூழ்நிலை. மாலையில் விடுதி அருகில் சென்று கொண்டு இருந்தபோது ஒருவர் அழைக்கிறார். சீனியர் ஆயிற்றே! பயத்துடன் செல்கிறேன். அவர் முகத்திலோ சிரிப்பு. "என்ன பண்ணுகிறாய்? சும்மா இருந்தா என்னுடன் கோவிலுக்கு வருகிறாயா" என்கிறார். மகிழ்ச்சியுடன் உடன் செல்கிறேன். மற்றவர்கள் மாதிரி இவர் மிரட்டி உருட்டவில்லை. அன்புடன் விசாரிக்கிறார். கோவில் சென்று பின் உணவருந்த செல்கிறோம். அடுத்த நாளும் அதே நேரம் கூப்பிட இது பழக்கமாகிப்போகிறது. பின்னால் விடுதியிலேயே நடக்கும் பஜனை ஒன்றுக்கு செல்கிறார் என அறிந்து கூடப்போகிறேன். என் ஆன்மீக தேடல் இப்படி ஆரம்பித்தது அவரால்தான். என்னுடன் என் சக மாணவன் ஒருவனும் வருகிறான். எங்களுக்கு சிஷ்யா லாங்கஸ், சிஷ்யா ப்ரெவிஸ் என பட்டப்பெயர்கள் சூட்டப்படுகின்றன. (இன்றைக்கும் அவரது சக மாணவர் மாதவனை நான் காணும் போதெல்லாம் அப்படித்தான் கூப்பிடுகிறார்.) ராகிங் எல்லாம் முடிந்து பின் விளையாட்டு மைதானம் போகும் போது அங்கும் அவரை பார்க்கிறேன். முன் பின் தெரியாத கூடைப்பந்து விளையாட்டை அவரிடம் கற்கிறேன். கிரிக்கெட், கூடைப்பந்து ஆகிய களங்களில் ஒன்றாகிறோம். தினசரி விளையாட்டு; முடித்து குளியல் சில நிமிடங்களில்; கோவில்; உணவு விடுதியில் ஓபனிங்க் பாட்ஸ்மென்! இப்படி பழகிப்போகிறது.
கல்லூரி பருவ வாழ்க்கையை உருப்படியாக அமைத்துக்கொடுத்த கே.எஸ்.ஸ்ரீதர் இப்படித்தான் அறிமுகமானார்.
அவரைப்போல பன்முக திறமைசாலியை இன்றுவரை நான் காணவில்லை. எளிய புத்தகங்களே படிப்பார். ஆனால் தலையணை போன்ற புத்தகங்கள் படிப்பவரைவிட அதிகம் தெரிந்து வைத்திருப்பார். தொடர்ந்து வகுப்பு தேர்வுகளில் முதலிடம். விளையாட்டு மைதானத்திலோ கிரிக்கெட், ஹாக்கி, கூடைப்பந்து என துவங்கி எந்த விளையாட்டையும் விட்டு வைக்கவில்லை. மூன்றாம் வருடம் விளையாட்டு காரியதரிசியானார். ஸ்போர்ட்ஸ் டே நடந்தது. இவர் எழுதிவைத்த ஆண்டு அறிக்கையை யாரிடமோ தந்து வைக்க அவர் காணாமல் போனார். நேரம் வந்தபோது படிக்க அறிக்கையை காணோம்! சற்றும் தயங்காமல் மேடையில் ஏறி தான் எழுதியதை கிடு கிடு என்று சொல்ல ஆரம்பித்துவிட்டார். பின்னால் அறிக்கை பிரதி கிடைத்து சரி பார்த்தபோது ஒரு வரி மட்டுமே விட்டுப்போயிருந்தது!
சகாக்களுடன் அரட்டையில் நேரத்தை செலவிட்ட என்னை நூலகம் சென்று இடையூறில்லாமல் படிக்கும் பழக்கம் இவர் ஏற்படுத்தியதுதான். மகா கோபசாலியான நான் மற்றவர்களுடன் அன்புடன் பழகுவதை இவரிடமே கற்றேன். ஒருநாள் விளையாட்டு முடிந்து திரும்பும்போது மற்றொருவருடன் கைகலப்பு ஏற்பட்டு அடி வாங்கினேன். (அந்த ஆசாமி குத்துச்சண்டை வீரர் என்ரு அப்புறம்தானே தெரியும்!) இதைப்பற்றி கேள்விப்பட்ட இவர் நீ ஏன் திருப்பி அடிக்கவில்லை என்று கேட்டு ஆச்சரியப்படுத்தினார். சாது என்றால் அடி வாங்கிக்கொண்டே இருக்க வேண்டியதில்லை எதிர்த்து நிற்கவேண்டும் என்பது கற்றேன். நோயாளிகளை பார்க்கவே தயங்கிவனை இழுத்துப்போய் அவரது வார்டில் உள்ள நோயாளிகளை காட்டி நோயைப்பற்றி சொல்லுவார். இவரிடம் நான் கற்றதை பட்டியல் இடுவது கடினம்.
கல்லூரி இறுதி வருட தேர்வில் இவரது பேராசிரியர் எக்ஸாமினரிடம் வந்து இவர் தங்கப்பதக்கம் வாங்க வேண்டியவர். சோதனை பண்ணுங்கள் என்று சொல்லிவிட்டு போய் விட்டார்! அவ்வளவுதான். அடுத்த அரை மணி நேரம் கேள்விகள் பறக்க கடைசியில் தங்கப்பதக்கம் இவருடையதாயிற்று! மற்ற மாணவர்கள் போல் அந்த காலத்தில் பிரசித்தமாக இருந்த ஈசிஎஃப்எம்ஜி தேர்வு எழுதி ஓஹையோ சென்று மருத்துவ மேல் படிப்பு படித்தார். இந்தகாலக் கட்டத்தில் இவருடன் தொடர்பு இழந்தேன். அந்த காலத்தில் வீட்டு கணினியே கிடையாது. அப்புறம்தானே மின்னஞ்சல். தொலைபேசி கட்டணங்கள் மிக அதிகம். கடித போக்குவரத்து சில வாரங்கள் ஆகும். ஆனால் நாம் போடும் கடிதங்களுக்கு கட்டாயம் பதில் வரும். பின்னர் தில்லி போய் நான் மேல்படிப்பு முடித்து சொந்த ஊரில் நிலையானேன். இடை இடையே கல்லூரி பழம் மாணவர் தின விழாவுக்கு வருவார். தகவல் பரிமாறிக்கொள்வோம். புற்றுநோய் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடு பட்டு இருக்கிறார் என தெரியவந்தது. ஒரு நாள் திடுதிப்பென்று என் நண்பனுடன் வந்தார். சிதம்பரம் போக வேண்டுமென்றார். ஒரு வாடகை வண்டி அமர்த்திக் கொண்டு சென்று வந்தோம். வாடகை வண்டி குறித்த சிறு சிக்கலை தீர்த்துவிட்டு வருவதற்குள் இருவரும் உணவருந்தி விட்டு புறப்பட தயாராகிவிட்டனர். உடனே சென்னை கிளம்பிவிட்டனர். அப்போதுதான் அவரை கடைசியாக பார்த்தது.
ஆறு வருடங்களுக்கு முன் ஒரு நாள் சிஷ்யா ப்ரவிஸ் உடன் பேசிக்கொண்டு இருந்தபோது "நம் ஸ்ரீதர் இறந்து போனது தெரியுமோ?” என்று ஒரு குண்டை தூக்கிப்போட்டார். மீஸோதீலியோமா குறித்து ஆராய்ச்சி செய்த அவர் லிம்ஃபோமா/ இரத்த புற்றுநோய் பாதிக்க இறைவனடி சேர்ந்தார் என்று தெரிய வந்தது. சிதம்பரம் போக வேண்டும் என வந்தபோதே பாதிப்பு இருந்திருக்கிறது. அதுபற்றி அவர் ஒன்றுமே சொல்லவில்லை.
இந்த கட்டுரை எழுத உட்கார்ந்தபோது சும்மா அவர் பெயரை கூகுள் இல் இட்டுப்பார்த்தேன்.
ஆச்சரியம்! அவரது ஆராய்ச்சி பற்றிய சில தகவல்கள் கிடைத்தன.
http://www.mesotheliomascience.org/showauthor.php?surname=Sridhar&initials=KS

புலிக்கு பிறந்தது பூனையாகுமா? அவரது மகள் தேவி ரோட்ஸ் ஸ்காலர் என தெரிகிறது. அவர் முகத்தில் அதே ஸ்ரீதர் சிரிப்பு!
http://www6.miami.edu/veritas/feb2003/fp/fpstory2.html
http://www.hindu.com/yw/2004/01/17/stories/2004011700120200.htm

0 மறுமொழிகள்: