௧0 பைசா தோசை

ஐதராபாத்: ஆந்திர தலைநகர் ஐதராபாத்தில் இருந்து 360 கி.மீ., தொலைவில் உள்ளது கடப்பா நகரம். இங்குள்ள ஒரு சிறு கடை முன், தினமும் காலை நேரங்களில் ஏகப்பட்ட கூட்டம். வரிசையில் நின்றபடி, மாணவர்களும், அலுவலக ஊழியர்களும் வேக, வேகமாக தோசைகளை, "உள்ளே' தள்ளுகின்றனர். இந்த அளவுக்கு கூட்டம் வர காரணம், தோசையின் விலை வெறும் 10 பைசா தான்.



இந்த உணவு கடையை நடத்தி வருபவர் முனி ரெட்டி (60); இவரது மனைவி ராம லட்சுமி. இவர்கள் நாள் தோறும், 2,000 தோசைகளை விற்பனை செய் கின்றனர். தோசைக்கு தொட்டுக் கொள்ள, தக்காளி, பச்சை மிளகாய் மற்றும் இஞ்சி என, மூன்று வகையான சட்னியும் அளிக்கப்படுகின்றன. ஏராளமானவர்கள், 100 தோசை முதல் 200 தோசை வரை பார்சலாகவும் வாங்கி செல்கின்றனர்.



தனது அனுபவம் குறித்து முனி ரெட்டி கூறியதாவது: இந்த தோசை கடை யை, 50 ஆண்டுகளுக்கு முன், துவக்கி வைத்தவர் எனது தாய் சுப்பம்மா. அப்போது அவர், ஆறு பைசாவுக்கு (ஒரு அணா) தோசை விற்பனை செய்தார். 1970ம் ஆண்டுகளில், பல்வேறு காரணங்களால், தோசையின் விலை 10 பைசாவாக உயர்த்தப்பட்டது. இதற்கு மேல், விலையை உயர்த்த கூடாது என, எனது தாய் கட்டளையிட்டார். அந்த கட்டளையை 20 ஆண்டுகளாக நிறைவேற்றி வருகிறேன்.



ஏழை மக்கள் தான், இந்த தோசையை விரும்பி சாப்பிடுகின்றனர். ஒரு தோசையை தயாரிக்க, ஒன்பது பைசா செலவாகிறது. சட்னி செலவு இதில் சேராது. எனினும், ஒரு பைசா லாபம் வைத்து தான் விற்பனை செய்கிறேன். விலைவாசி உயர்ந்து விட்டதால், தோசையின் அளவை குறைத்து விட்டேன். இருந்தாலும், காலை நேரங்களில், கடைக்கு வருபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. ஒரு நபர், ஆறு முதல் 10 தோசை வரை சாப்பிடுவார்.



இந்த சிறு வருமானம், எனது குடும்பத்தை நடத்த போதுமானதாக உள்ளது. இருந்தாலும், கூடுதல் வருமானத்துக்காக, பிஸ்கட், சிகரெட், மிட்டாய்கள், சோப்புகள் ஆகியவற்றை விற்பனை செய்கிறேன். ரேஷனில், குறைந்த விலையில் அரிசி கிடைக்கிறது. இருந்தாலும், அந்த அரிசியின் தரம் சிறப்பாக இல்லை. எனவே, விவசாயிகளிடம் இருந்து நேரடியாக அரிசியை வாங்குகிறேன். அவர்கள், 40 சதவீதம் விலையை குறைத்து, தருகின்றனர். இத்தொழிலில், எனது இரண்டு மகன்களுக்கு விருப்பம் இல்லை. இருந்தாலும், என் உயிர் உள்ள வரை, 10 பைசா தோசையை விற்பனை செய்வேன்.

0 மறுமொழிகள்: