காஸ் ஸ்டவ்

may 2,2008

பெங்களூரு: "ஐரோப்பிய மாடல் காஸ் ஸ்டவ் வாங்கலாமா?' என்று தான் நகரங்களில் உள்ள பெண்களின் சிந்தனை போகிறது. ஆனால், சுற்றுச்சழல் பாதுகாப்புக்கு உண்மையாக பாடுபடுபவர்கள் நாங்கள் தான் என்று கிராம பெண்கள் சாதித்து வருகின்றனர். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு கேடாக உள்ளவையாக சில மாசுகளை, ஐக்கிய நாடுகள் சபை பட்டியலிட்டுள்ளது. அதில், நான்காவதாக உள்ளது "கார்பன்' வாயு தான். பெட்ரோல், டீசல், காஸ், மண்ணெண்ணெய் போன்றவற்றை பயன்படுத்துவதால், இந்த வாயு மிக மோசமாக சுற்றுச்சூழலை கெடுக்கிறது.

இவற்றின் பயன்பாட்டை நிறுத்த வேண்டும்; சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு உகந்த மாற்று எரிபொருள் பயன்பாட்டை ஊக்கப்படுத்த வேண்டும் என்று, மத்திய, மாநில அரசுகளும் பல வகையில் முயற்சி செய்து வருகின்றன. ஆனால், நகரங்களில் உள்ள மக்கள் அதில் பெரிதும் அக்கறை காட்டுவதில்லை. சூரிய சக்தி மின்சாரம் முதல் ஸ்டவ் வரை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு பல பொருட்கள் உள்ளன. இந்த வகையில், சமீபத்தில் சிறிய ஸ்டவ் விற்பனைக்கு வந்துள்ளது. இதன் பெயர் "ஊர்ஜா' சிறிய ஸ்டவ் என்றாலும், காஸ் அடுப்பு போல எரியும். காஸ் சிலிண்டர் செலவை விட பாதி தான் செலவாகும். தென்மாநிலங்களில் உள்ள கிராமங்களில் இந்த ஸ்டவ்வை பிரபலப்படுத்த கிராமங்களில் உள் பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகின்றனர்.

சர்வதேச அளவில் எரிசக்தி தயாரிப்பு நிறுவனமான "பிபி' சார்பில், இந்தியாவில் "பி.பி.,எனர்ஜி இண்டியா' என்ற நிறுவனம், இந்த ஸ்டவ்வை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இந்த திட்டத்துக்கு அரசு உதவியோ, தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் ஒத்துழைப்போ இல்லை. கிராமங்களில் நேரடியாக நிறுவனத்தின் பிரதிநிதிகள் பிரசாரம் செய்து, பெண்களை நியமித்து வருகின்றனர். தமிழகம், கர்நாடகா, ஆந்திரா, கேரளாவில் உள்ள கிராமங்களில் 10 லட்சம் ஸ்டவ்களை விற்க இலக்கு நிர்ணயித்துள்ளது இந்த நிறுவனம்.

இதற்காக, இந்த மாநிலங்களில் உள்ள கிராமங்களில் மூன்றாயிரம் பெண் விற்பனை பிரதிநிதிகளை நியமித்துவருகிறது. ஸ்டவ்வின் விலை 675 ரூபாய். இந்த ஸ்டவ்வில் எரிபொருளாக பயன்படுத்தப்படுவது, வேர்க்கடலை சருகுகள் உட்பட விவசாய மிச்சம் மீதிகளை காயவைத்து, தயாரிக்கப்படும் உருண்டைகள் தான். ஒரு மூட்டை எரிபொருள் உருண்டைகள் விலை 50 ரூபாய். கர்நாடக கிராமங்களில் இப்போது படுபிசியாக இந்த ஸ்டவ்வை, கிராம மக்கள் வாங்கி வருகின்றனர். தமிழக கிராமங்களிலும் விரைவில் இந்த ஸ்டவ் விற்பனைக்கு வரும்.

0 மறுமொழிகள்: