கொசு ஒழிப்பு !

may 2, 2008

பெங்களூரு: கொசுக்கள் இன பெருக்கத்தை கட்டுப்படுத்த புதுவகை நடைமுறையை ராணுவ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு ( டி.ஆர்.டி.இ.,) கண்டுபிடித்துள்ளது. டி.ஆர்.டி.இ., அமைப்பின் வாழ்க்கை அறிவியல் மற்றும் மனித வள பிரிவின் தலைமை பொறுப்பாளர் செல்வமூர்த்தி கூறியதாவது: "லார்வா' என அழைக்கப்படும் முட்டைப்புழுக்கள், நீர் நிலைகளில் வெளிப்படுத்தும், பெரோமோனி ஹார்மோன் தான், பெண் கொசுக்கள் ஈர்த்து, முட்டைகளை இட வைக்கின்றன. பெரோமோனி ஹார்மோன் மற்றும் பூச்சிகளை அழிக்க பயன்படுத்தப்படும் ரசாயன பொருளையும் ஒன்று சேர்த்து, "அட்ராக்சிசைட்' என்ற திரவத்தை உருவாக்கியுள்ளோம்.

இந்த திரவத்தை, குறிப்பிட்ட நீர்நிலைகளில் தெளித்தால் போதுமானது. அந்த நீர்நிலைகளை தேடி வந்து கொசுக்கள் முட்டைகள் இடும். கொசுக்களின் இன பெருக்கம் குறிப்பிட்ட பகுதிக்குள் கட்டுப்படுத்தப்படும். இந்த சோதனையை, அமைச்சரவை செயலர் பார்வையிட்டுள்ளார். இந்த சோதனையை நடத்திப்பார்க்கும்படி, அனைத்து மாநில அரசுகளுக்கும் அவர் கூறியுள்ளார். இந்த சோதனையை, தமிழ்நாடு, கேரளா, மகாராஷ்டிரா மற்றும் டில்லி மாநிலங்கள் ஏற்கனவே, நடத்த தொடங்கி விட்டன. சோதனை வெற்றி பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

வடகிழக்கு மாநிலங்களில், கொசுக்கள் தொல்லை அதிகமாக உள்ளது. அசாமில் தேஸ்பூர் என்ற இடத்தில் உள்ள ராணுவ ஆராய்ச்சிக் கூடம், மூலிகை கொசு விரட்டியை கண்டுபிடித்துள்ளது. நோய்களை பரப்பும் கருவியாக, கொசுக்களை பயன்படுத்துவதை தடுக்கவே இந்த ஆராய்ச்சி நடக்கிறது. எனவே, மூலிகையை கொண்டு திரவ நிலையில் உள்ள கொசு விரட்டியும், கிரீமும் உருவாக்கப்படுகிறது. சாதாரண கொசு விரட்டி, நான்கு அல்லது ஐந்து மணி நேரம் மட்டுமே பலன் தரும். ஆனால், மூலிகை கொசு விரட்டி, 12 மணி நேரம் பலன் தரும்; இது வடகிழக்கு மாநில எல்லைப்பகுதியில் உள்ள ராணுவ வீரர்களுக்கு மிகவும் உதவியாக இருக்கும். இவ்வாறு செல்வமூர்த்தி கூறினார்.

0 மறுமொழிகள்: