பிராணி நேயம்

அதென்னங்க எப்ப பாத்தாலும் மனித நேயம்? இங்க பிராணி நேயம் பாருங்க!
--------------

கர்நூல்: அரசாங்க ஊழியர்கள், தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் தொழிலாளர்கள் வாரத்தில் ஒருநாள் விடுமுறை எடுத்துக் கொள்ளும் வழக்கம் பல ஆண்டுகளாக நமது நாட்டில் பின்பற்றப்பட்டு வருகிறது। இதேபோன்று மனிதர்களுக்காக உழைக்கும் வாயில்லா பிராணிகளான எருதுகளுக்கும் வாரத்தில் ஒருநாள் திங்கட் கிழமை விடுமுறை அளித்து இங்குள்ள விவசாயிகள் பிராணிகள் நேயத்தை கடைப்பிடித்து வருகின்றனர்.


ஆந்திராவில் கர்நூல் மாவட்டம் ஆலஹர்வி அருகே விருபாபுரம் அடுத்த பலுகோட கிராம விவசாயிகள் வாரத்தில் ஒருநாள் இப்படி ஓய்வு அளிக்கின்றனர். இந்த கிராமத்தில் பசவேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இங்கு மூலவராக எழுந்தருளியுள்ள பசவேஸ்வர சுவாமியின் (நந்தி எருது) வாகனமான எருதுகளை கிராமத்தின் எல்லையில் உள்ள ஏரிக்கு ஓட்டிச் சென்று ஒவ்வொரு வாரமும் திங்கட் கிழமையன்று தண்ணீரில் குளிப்பாட்டி சுத்தம் செய்கின்றனர். பின்னர், ஏரியிலிருந்து எருதுகளை குழந்தை குட்டிகளுடன் இங்குள்ள பசவேஸ்வர சுவாமி கோவிலுக்கு அழைத்து வந்து பூஜை செய்கின்றனர். இந்த கிராமத்து விவசாயிகள் அனைவரும் இந்த முறையை தவறாமல் கடைப்பிடித்து வருகின்றனர். நிலத்தில் விதை விதைக்க வேண்டுமென்றால் கூட திங்கட் கிழமை ஏர் கட்ட மாட்டார்கள். மேலும், இந்த கிராமத்தில் வசிப்பவர்கள் மது அருந்தி விட்டால் கோவில் அருகில் செல்ல மாட்டார்கள். திங்கட் கிழமை அன்று கிராம மக்கள் யாரும் மாமிசம் சாப்பிட மாட்டார்கள். இதுபோன்ற கிராம கட்டுப்பாட்டினால் தங்கள் விளை நிலத்தில் நல்ல விளைச்சல் காண்பதாக, இந்த கிராம மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.

0 மறுமொழிகள்: