கோமா பாட்டி மீண்ட செய்தி

அன்புக்கும் உண்டோ அடைக்கும் தாழ்?
--------------


லண்டன்: ஏதோ ஒரு காரணத்தால், தலையில் அடிபடும் போது, சுயநினைவை இழக்கும் பரிதாபம் பலருக்கும் ஏற்படத்தான் செய்கிறது। கோமா நிலைக்கு சென்றுவிடும் காலகட்டத்தில், மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியவர்கள் அரிதாகத்தான் இருக்கிறார்கள். ஆனால், பிரிட்டனில், சாலை விபத்தில் சிக்கி, கோமா நிலைக்குச் சென்ற பெண்ணை, மீண்டும் சுய நினைவிற்கு கொண்டு வந்துள்ளார் அவரது பேத்தி.

இந்த சுவாரஸ்யமான சம்பவம் குறித்து கூறப்படுவதாவது; வடக்கு லண்டன், நீஸ்டன் பகுதியை சேர்ந்தவர் தேவ்பாய் பட்டேல் (56). இந்தியாவைச் சேர்ந்த இவர், தற்போது இங்கிலாந்தில் வசித்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன், தனது வீட்டின் அருகே தேவ்பாய் பட்டேல் நடந்து போய்க் கொண்டிருந்தார். அப்போது, அந்த வழியாக கட்டுப்பாட்டை இழந்து சென்ற லாரி, இவர் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபத்தில் லாரி டிரைவர் இறந்தார். படுகாயமடைந்த தேவ்பாய் பட்டேல், மருத்துவமனையில் சேர்க்கப்பட் டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேவ்பாய் பட்டேல் கோமா நிலைக்கு சென்று விட்டதாக கூறினர். மேலும், தங்களால் முடிந்த அளவுக்கு அனைத்து வழிமுறைகளையும் கையாண்டனர். இருப்பினும், சுய நினைவுக்கு பட்டேல் திரும்பவில்லை.


இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் பட்டேலை பார்ப்பதற்காக அவரது பேத்தி லீலாவை, தாத்தா குன்வெர்ஜி அழைத்து சென்றார். தீவிர சிகிச்சை பிரிவில் பாட்டியை பார்த்த லீலா, தன்னையும் மறந்து ஓ... வென்று கதறினார். அப்போதுதான், அந்த அதிசயம் நடந்தது, டாக்டர்கள் பேச்சு கொடுத்தும், எழுப்ப முயன்றும் எதுவுமே பயன் தராத நிலையில், தனது பேத்தியின் கதறல், பாட்டியை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு வந்தது. கண் விழித்துப் பார்த்த பட்டேல், தனது பேத்தியை கொஞ்சி மகிழ்ந்தார். இந்த அதிசய காட்சியைப் பார்த்த டாக்டர்களால், தங்களது கண்களையே நம்ப முடியவில்லை. இது மருத்துவ உலகில் நடந்த அதிசயம் என்று வியந்தனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பட்டேல், இப்போது நலமாக இருக்கிறார்

0 மறுமொழிகள்: