இதய நோய் மருத்துவத்தில்....

11/6/2008
சென்னை: கால்நடைகள், பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் வால்வுகள், ரத்த குழாய்கள், நரம்புகள், திசுக்கள் போன்றவை, மனிதர்களின் இதய நோயை குணப்படுத்த, நான்கு ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப்பட்டுள்ளன. சென்னையில் செயல்பட்டு வரும் பிரான்டியர் லைப் மருத்துவமனை டாக்டர்கள் குழு, இதில் 100 சதவீதம் வெற்றி பெற்று வருகின்றனர். மனித இதயங்களில் சில பகுதிகளை மாற்ற முடியாத சிக்கல்கள் உள்ளன. செயற்கையான முறையில் தயாரிக்கப்படும் சிந்தடிக் ரத்தநாள குழாய்கள் பொருத்தப் பட்டால், பல்வேறு பிரச்னைகள் காரணமாக அவர்கள் மீண்டும் மருத்துவமனைக்கே திரும்ப நேரிடுகிறது.

இதனால், பிரான்டியர் லைப் மருத்துவக்குழுவினர் கால்நடைகளின் ரத்த குழாய்கள், வால்வுகள், நரம்புகள், திசுக்களை பயன்படுத்தும் ஆய்வில் ஈடுபட்டு, அதில் வெற்றியும் பெற்றுள்ளனர். கேரளா மற்றும் ஆந்திராவில் உள்ள இரண்டு அதிநவீன, சுகாதாரம் மிக்க இறைச்சிக் கூடங்களுக்கு டாக்டர்கள் குழுவினர் செல்கின்றனர். அங்கு வெட்டப்படும் எருமைகளின் கழுத்துப்பகுதியில் உள்ள தொண்டை நரம்பை கவனமாக பிரித்து எடுக்கின்றனர். பன்றிகளில் உள்ள பல்மொனரி ரத்தக் குழாய்களையும் பிரித்துஎடுக்கின்றனர். இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் சவ்வையும் எடுக்கின்றனர். இவற்றை மருத்துவமனை பரிசோதனைக் கூடத்தில் விசேஷ கரைசலில் ஊற வைக்கின்றனர். இதன் மூலம், கிருமி தொற்று ஏற்படுவது முற்றிலும் தடுக்கப்படுகிறது. இதில் மனித செல்களும் சேர்க்கப்படுகின்றன.

ஆரம்பத்தில் இந்த ரத்தக்குழாய்கள், தொண்டை நரம்பு, பெரிகார்டியம் ஆகியவை, உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு ஆணையத்தில், ஆட்டுக்கு பொருத்தி பரிசோதிக்கப்பட்டு, அங்கீகாரம் வழங்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மனிதர்களுக்கு இவை பயன்படுத்தப்படுகின்றன. ஏராளமானோர், நுரையீரலுக்கு ரத்தத்தை எடுத்துச் செல்லும் பல்மொனரி ரத்தக்குழாய் இல்லாமலேயே பிறக்கின்றனர். இவர்களுக்கு பல்மொனரி ரத்தக்குழாய் பொருத்தப்படுவது அவசியம். இவ்வாறு மனிதர்களுக்கு பொருத்தப்படும் ரத்தக்குழாய்கள், இதயத்தை மூடியிருக்கும் பெரிகார்டியம் இரட்டை சுவர் சவ்வு, போன்றவற்றில் ரத்த உறைதல், வேறு திரவ சுரப்பு போன்றவை மூன்று மாதத்துக்குள் ஏற்படாது. எனவே, இவற்றை வால்வுகளுடன் வெற்றிகரமாக முடிகிறது. பிரான்டியர் லைப் மருத்துவமனையில் இதுவரை 400 பேருக்கு இவை பொருத்தப் பட்டுள்ளன. ஒரே ஒருவரை தவிர, எல்லாருக்கும் இவை வெற்றிகரமாக பொருத்தப் பட்டு செயல்பட்டு வருகிறது. மத நம்பிக்கை கொண்டவர்கள் பன்றிகளில் இருந்து எடுக்கப்படும் ரத்தக்குழாய்கள் பொருத்தப்படுவதை விரும்புவது இல்லை. இதற்கு பதிலாக, எருமைகளில் இருந்து எடுக்கப்படும் கழுத்து நரம்புகள் வெற்றிகரமாக பொருத்தப்படுகின்றன.

2 மறுமொழிகள்:

வடுவூர் குமார் சொல்வது:

பன்றிக்கு தற்காலிக விடுதலை.

திவாண்ணா சொல்வது:

//பன்றிக்கு தற்காலிக விடுதலை.//
:-))))))))))
ம்ம்ம்ம்! ஆதை தொந்திரவு செய்ய அடுத்து ஏதாவது மனுஷன் கண்டுபிடிச்சுடுவான்!