தூய்மையான கிராமம்

இது போதாது, இன்னும் எவ்வளவோ தூரம் போகனும் இல்லையா?
-----------

ஷில்லாங்: பொது இடங்களிலேயே குப்பையை கொட்டுவது, சாக்கடைகளை தூய்மை படுத்தாமல் அப்படியே விட்டு விடுவது, போன்ற செயல்கள் அதிகம் அரங்கேறிவரும் காலத்தில், சுற்றுப்புற தூய்மைக்கு எடுத்துக்காட்டாக உள்ளது மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம். மேகாலயா மாநிலத்தில் உள்ள மாவ்லினாங் கிராமம், தலைநகர் ஷில்லாங்கிலிருந்து 75 கி.மீ., தூரத்தில், ஜெயின்தியா மலை மாவட்டத்தில் உள்ளது. சுத்தம் என்பதற்கு இலக்கணமாக திகழும், இந்த கிராமத்தில் உள்ள தெருக்களில் மூங்கிலால் செய்யப் பட்ட குப்பைத் தொட்டிகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன. இதில் சேகரிக்கப்படும் குப்பைகள், அதற்கென பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட பள்ளத்தில் கொட்டப்படுகின்றன. இதில் தரம் பிரிக்கப்படும் மக்கும் குப்பையைக் கொண்டு உரம் தயாரித்து, விவசாயத்துக்கு பயன்படுத்துகின்றனர். இந்த கிராமத்தில், பிளாஸ்டிக் பைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.


இது குறித்து, அந்தக் கிராமத்தின் தலைவர் தாம்லின் கோங்கோத்ரெம் கூறியதாவது :பரம்பரை பரம்பரையாகவே, சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டு வந்ததன் விளைவாகத்தான் இந்தக் கிராமம், தூய்மைக்கு உதாரணமாக திகழ்ந்து வருகிறது. சுமார், 450க்கும் மேற்பட்ட குடும்பங் கள் வசிக்கும் இந்தக் கிராமத்தில், யாருக்கும் குடிப்பழக்கம் என்பது கிடையாது. இதனால், இயல்பாகவே ஒவ்வொரு குடும்பத்திலும் அமைதியான சூழ்நிலை நிலவுகிறது. இது மட்டுமின்றி, கால்நடைகள், தாவரங்கள் ஆகியவற்றையும் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வும் இங்குள்ளவர்களிடையே இயல்பாக ஏற்பட்டுள்ளது. எதிர்கால சந்ததியினருக்கும், இப்போதுள்ள சுற்றுப்புற சூழல் கிடைக்க வேண்டும் என்பதில் கிராம மக்கள் மிகவும் உறுதியுடன் உள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், மே மற்றும் ஜூன் மாதங்களில், மரக்கன்றுகள் நடப்படுகின்றன. இத்தனை சிறப்புகளை கொண்டுள்ள இந்த கிராமம், ஆசியாவின் தூய்மையான கிராமமாக கடந்த 2003ம் ஆண்டு தேர்ந் தெடுக்கப்பட்டது. சுற்றுப்புற தூய்மைக்கு உதாரணமாக திகழும் இந்தக் கிராமத்தில், பொது இடங்களில், குப்பையை கொட்டும் நபர்கள் தண்டிக்கப்படுவதில்லை . தண்டிப்பதில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை; வெளியூர்க் காரர்கள் குப்பைகளை தெரியாமல் பொது இடத்தில் வீசும் பட்சத்தில், யார் அதனை முதலில் பார்க்கிறார்களோ, அவர்களே அதை எடுத்து குப்பைத் தொட்டியில் வீசிவிடுவர். இங்குள்ள நீரோடைகளில் ஓடும் தண்ணீர் கண்ணாடியைப் போல் பளபளப்பாக மின்னுவதால், எந்தவித தயக்கமுமின்றி தண்ணீரை அப்படியே குடிக்கலாம். இந்த கிராமம், சுற்றுலாத் தலமாக உருவாகிவருகிறது. அதிகம் பேர் வந்து தங்கி மகிழ்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.

1 மறுமொழி:

Several tips சொல்வது:

மிகவும் அருமை