கோவையில் மீண்டும் ஒரு பசுமை புரட்சி கருத்தரங்கில் பங்கேற்கிறார் சுபாஷ் பாலேக்கர்
பிப்ரவரி 24,2008,02:30
கோவை: 'வினை விதைப்பவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்...' என்ற பழமொழியும் இப்போது பொய்த்துப் போனது. எதை விதைத்தாலும் வேதனையை அறுவடை செய்வதே விவசாயிகளுக்கு வாடிக்கையாகி விட்டது. கடந்த ஓராண்டில் இந்தியாவில் 17 ஆயிரம் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்பது அரசே சொல்லும் புள்ளி விபரம். இத்தனைக்கும் கடந்த ஆண்டில் மத்திய அரசின் நிதிநிலை அறிக்கையில், விவசாயிகளுக்கு உர மானியமாக ஒதுக்கப்பட்ட தொகை, ரூ.38 ஆயிரம் கோடி.
ஈரியோபைடு, வாடல் நோய் என பயிர்களைத் தாக்கும் நோய்களின் படையெடுப்பு குறையவில்லை. தண்ணீருக்காக பக்கத்துத் தோட்ட விவசாயியுடன் துவ ங்கிய சண்டை, இப்போது பக்கத்து மாநிலம் வரைக்கும் பஞ்சாயத்தில் நிற்கிறது. வேளாண் பல்கலைக்கழகங்கள் ஆராய்ச்சிகள் நடத்திக் கொண்டே இருக்கின்றன; புதிது புதிதாக பயிர் ரகங்களை அறிமுகப்படுத்திக் கொண்டே இருக்கின்றன. ஆனால், விவசாயிகளின் வாழ்க்கை மட்டும் வாடிய பயிராக மண்ணில் சாய்ந்து கொண்டே போகிறது.
காடுகளெல்லாம் அழிக்கப்பட்டு, 'கான்கிரீட் காடு'களாக உருமாற, பயிர்கள் விளைந்த இடங்களில் பளபளக்கும் அடுக்கு மாடிகள் முளைக்கின்றன. விவசாயம்தான் செய்வேன் என்று வீம்பு பிடிக்கும் விவசாயிக்கு, கடனும், கவலையும் கழுத்தை நெரிக்கின்றன. தும்பைப்பூ நிறத்தில் வேட்டி, சட்டையில் சின்னக் கருப்பு விழுந்தாலே துவண்டு போகும் விவசாயிக்கு, கடன் தொல்லையால் கவுரவம் கவிழும் போது உயிரை மாய்த்துக் கொள்வது உசிதமாகத் தெரிகிறது. விளைவு, விவசாயிகளின் தற்கொலை ஆண்டுக்காண்டு அதிகரிப்பு.
பத்தாயிரம் ரூபாய் விளைச்சல் பார்க்க, ஏழாயிரம் ரூபாய் செலவழிக்கும் விநோதத்தை அரங்கேற்றும் முட்டுவளிச் செலவுகள். களை எடுக்க ஆள் கிடைக்காத அவலம், தண்ணீர் பாய வேண்டிய நாளில் காய்ந்து கிடக்கும் கால்வாய், கடனுக்கு உரம் வாங்க, கடைக்காரனிடம் வரம் கேட்கும் வருத்தத்துக்குரிய வாழ்க்கை... இப்படி விவசாயம் என்பதே வேதனைகளின் கலவையாக மாறிப்போனதன் காரணம் என்ன...?.
தந்தையும், தாத்தாவும் இதே மண்ணில்தானே ஆயிரமாயிரமாய் விளைச்சல் பார்த்தார்கள்; ஆனந்தமாய் வாழ்க்கை நடத்தினார்கள் என்று அனுபவ பரிசோதனையும், ஆன்ம விசாரணையும் செய்து பார்த்தால், எந்த விவசாயிக்கும் ஒரு உண்மை தெரியவரும். தவறு மண்ணின் மீதில்லை, மனசுக்குள் இருக் கிறது என்று. மண்ணையெல்லாம் ரசாயன உப்புக்களின் உப்பளங்களாக மாற்றி விட்ட தவறுகளை யார் செய்தது? உள்ளே இருந்த கோடிக்கணக்கான நுண்ணுயிர்களை கண்ட உரத்தையும் போட்டு மண்ணோடு மண்ணாக சமாதியாக்கிய சாதனையை யார் நிகழ்த்தியது?மேய்ப்பதற்கு ஆளில்லை என்று பராமரிக்க முடியாமல் நாட்டுப்பசுவை வந்த விலைக்கு ஓட்டி விட்டது நினைவுக்கு வருகிறதா? இயற்கைக்கு எதிரான எல்லா விஷயங்களையும் செய்து விட்டு, இப்போது செயற்கையாக அழுது புலம்புவதில் என்ன நியாயம் இருக்கிறது...?.
இந்த வேதனைகளுக்கெல்லாம் தீர்வுதான் என்ன?...கீதைப்படி சொல்வது என்றால், நடந்தவை நடந்தவைகளாக இருக்கட்டும், இனி நடப்பவை எல்லாம் நன்மையாகட்டும். நடப்பது நன்மையாக ஒரு வழி இருக்கிறது...முட்டுவளிச் செலவுகள் இல்லாத, கவலைகளைத் துரத்தியடிக்கும் புதிய வேளாண் மந்திரமான 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்தான் அது. நவீன இயந்திரங்கள், விளை நிலங்களை கீறிப்போடும் கனரக வாகனங்கள், விளம்பரங்களோடு பவனி வரும் வீரிய ரகங்கள், மூடை மூடையாக ரசாயன உரங்கள், கூட்டம் கூட்டமாய் வேலையாட்கள் என விவசாயிகளை பல முனைகளில் தாக்கி 'கொல்லும்' விவசாயத்துக்கு முடிவு கட்டி, 'வெல்லும் விவசாயம்'தான் இந்த 'ஜீரோ பட்ஜெட்' விவசாயம்.
தண்ணீரைப் பாய்ச்சி, கண்ணீரை அறுவடை செய்யும் விவசாயிகள், ஆனந்தத்தை அறுவடை செய்வதற் கான செலவில்லா விவசாயம்தான் இந்த புதிய முறை விவசாயம். உண்மையில் சொல்லப்போனால், மூதாதையர் நம் மண்ணோடு சேர்த்து நமக்கு விட்டுச் சென்ற சொத்துதான் இது. அதை உங்களுக்கே நினைவூட்டி, இழந்து போன சந்தோஷங்களை மீட்டுக் கொடுக்கும் அதிசயம்தான் இந்த செலவில்லா விவசாய முறை. இந்த அதிசயத்தை கோவை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் அற்புத நிகழ்ச்சி, கோவை கொடிசியா அரங்கில் மார்ச் 22லிருந்து 25 வரை நான்கு நாட்கள் நடக்க இருக்கிறது.
நொய்யலுக்கு மறு உயிர் கொடுத்து, ஏராளமான குளங்களில் ஈரத்தை நிறுத்தி வைத்த கோவை 'சிறுதுளி' அமைப்பு, இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்துள்ளது.இவர்களுடன் தினமலர் நாளிதழும் கரம் கோர்க்கிறது. எதற்காக? நம் பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கத்தான். விரக்தியின் விளிம்பில் வேதனைப்பட்டுக் கொண்டிருந்த இந்திய விவசாயிகளுக்கு புதிய நம்பிக்கை நட்சத்திரமாக, இன்னொரு பசுமைப் புரட்சிக்கு விதை போட்ட கனவு நாயகனான, 'உழவர்களின் கலாம்' சுபாஷ் பாலேக்கர் பங்கேற்கும் அரிய நிகழ்வுக்கு உங்களை அன்போடு அழைக்கிறது 'சிறுதுளி' அமைப்பு.
எல்லாம் சரி! யார் இந்த சுபாஷ் பாலேக்கர்?...அவரது அறிமுகம் நாளை! விவசாயிகளே இனியும் உங்கள் உழைப்பு வீணாக வேண்டாம். நம்மிடம் இருக்கும் இயற்கை வரங்களை கொண்டே முட்டுவளி செலவு எதுவும் இல்லாமல், தரமான விவசாயத்தை பார்க்க முடியும். இதற்கு வழிகாட்டும் இந்த நிகழ்ச்சிக்கு இப்போதே தயாராகுங்கள்....
http://www.dinamalarbiz.com/News_large.asp?News_id=156&new=2&pg=1
செலவில்லாத விவசாயத்திற்கு அழைப்பு:
பதித்தவர் திவாண்ணா இந்த நேரத்தில்
குறிச்சொற்கள் செய்தித்தாளில் இன்றைய நல்ல சேதி
Subscribe to:
Post Comments (Atom)
3 மறுமொழிகள்:
சுபாஷ் பாலேக்கர்- இவர் யார்? என்று முதலிலேயே கேள்வி வந்தது...அடுத்த பதிவு வரை காத்திருக்கோம்.
//தந்தையும், தாத்தாவும் இதே மண்ணில்தானே ஆயிரமாயிரமாய் விளைச்சல் பார்த்தார்கள்; ஆனந்தமாய் வாழ்க்கை நடத்தினார்கள் //
இது எந்த அளவிற்கு உண்மை?முப்பது கோடி மக்கள் தொகை இருந்த காலத்துலேயே மக்களுக்கு உணவு உற்பத்தி செய்ய முடியாமல் பஞசம் இருந்தது அந்த காலம்.
எந்த காலத்திலும் விவசாயிகளின் வாழ்க்கை கடினமானது தான்.
உண்மையிலேயே, சுபாஷ் பாலேக்கர் சபாஷ் பாலேக்கர்தான். அவருடைய 'சீரோ பட்ஜெட்' பசுமை விகடனில் தொடர்ந்து வருகிறது.
அதைப் பற்றியும், மற்ற விவசாய செய்திகளையும் படிக்கும்போது, விவசாயம் செய்யவேண்டும் என்ற என் ஆவல் மீண்டும் உயிர்பெறுகிறது :)
Post a Comment