மயக்க பிஸ்கட் கொள்ளையர் பிடிபட்டனர்

சென்னை : ஓடும் ரயில்களில் பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து நகை, பணம் கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த நான்கு பேர் சென்னையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.



சமோசா கடையில் வேலை பார்த்துக் கொண்டே இக்கொள்ளையில் ஈடுபட்டது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. வடமாநிலங்களில் இருந்து ஆந்திரா வழியாக, சென்னை வரும் எக்ஸ்பிரஸ் ரயில்களில், பயணிகளுக்கு மயக்க பிஸ்கட் கொடுத்து அவர்களிடம் நகை, பணம் போன்றவற்றை கொள்ளையடித்துச் செல்வது கடந்த ஏழு, எட்டு ஆண்டுகளாக நடந்து வந்தது. இந்த மயக்க பிஸ்கட் கும்பலிடம் சிக்காமல், பயணிகள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என ரயில்வே போலீசாரும் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வந்தனர். ரயிலில் முன்பின் தெரியாதவர்கள் கொடுக்கும் உணவுப் பொருட்களான பிஸ்கட், குளிர் பானங்களை சாப்பிடக் கூடாது என்று துண்டு பிரசுரங்களை வினியோகித்தனர். ரயில் நிலையங்களில் உள்ள `டிவி'க்களிலும் விழிப்புணர்வு விளம்பரங்களை செய்தனர். இருப்பினும், மயக்க பிஸ்கட் கும்பலிடம் பயணிகள் சிக்கிக் கொள்வது தொடர்ந்தது.

சென்னை சவுகார்பேட்டையைச் சேர்ந்த வியாபாரி கண்பத். இவர் கடந்த 23ம் தேதி ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் பயணம் செய்த போது, மயக்க பிஸ்கட் கும்பலிடம் சிக்கி நகை மற்றும் பணத்தை பறிகொடுத்தார். இதுதொடர்பாக போலீசிலும் புகார் கொடுத்துள்ளார்.வியாபாரி கண்பத், மூன்று தினங்களுக்கு முன் சென்னை பூக்கடை போலீஸ் நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்த போது, ஜோத்பூர் எக்ஸ்பிரஸ் ரயிலில் தன்னிடம் சகஜமாக பழகி, இந்தி மொழியில் பேசி, பிஸ்கட் கொடுத்த நபரை கண்டார். உடன் உஷாராகி ரயில்வே போலீசுக்கு தகவல் கொடுத்தார். சென்ட்ரல் ரயில்வே போலீசார் `மப்டி'யில் கண்காணித்து கண்பத் சொன்ன அடையாளங்களை வைத்து கணேஷ்(40) என்பவரை சவுகார்பேட்டையில் கைது செய்தனர்.

விசாரணையில் கணேசுக்கு தினேஷ், ராம் அகர்வால் என்ற வெவ்வேறு பெயர் இருப்பதாகவும், இடத்திற்கு தகுந்தாற்போல் பெயரை மாற்றிக் கொள்வதும் தெரிய வந்தது. மயக்க பிஸ்கட் கொடுத்து, ரயில் பயணிகளிடம் கொள்ளையடிக்க, கணேசுக்கு உதவியாக இருந்த அவரது கூட்டாளிகள் ஷியாம்லால்(40), சுனு(20). கிருஷ்ணு(24) ஆகிய மூன்று பேரையும் போலீசார் கைது செய்தனர். கைதான நான்கு பேரும் சென்னை மூலக்கொத்தளம் பகுதியில், வாடகை வீட்டில் தங்கியிருந்து, சமோசா தயாரிக்கும் கடையில் வேலை பார்த்து வந்துள்ளனர். ரயிலில் கொள்ளையடிக்கும் நேரம் போக, மற்ற நேரங்களில் சமோசா கடையில் வேலை செய்து வந்தனர். இந்த நான்கு பேரும் உத்திரபிரதேசம் ஜான்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். நான்கு பேரும் மயக்க பிஸ்கட் கொடுத்து கொள்ளையடித்த ஏழு வழக்குகளில் சம்பந்தப்பட்டுள்ளனர் என்றும், அதில் தமிழகத்தில் மட்டும் மூன்று வழக்குகளில் சம்பந்தப்பட்டு இருப்பதாக ரயில்வே போலீசார் தெரிவித்தனர்.

கைதானவர்களிடம் இருந்து 10 சவரன் தங்க நகை, இரண்டு மொபைல் போன் மற்றும் ஒரு வாட்ச் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. இத்தகவலை ரயில்வே ஐ.ஜி., மாகாளி தெரிவித்தார். பேட்டியின் போது ரயில்வே டி.ஐ.ஜி., சிவனாண்டி, எஸ்.பி., சாரங்கன் உடனிருந்தனர்.
தினமலர்.காம்

0 மறுமொழிகள்: