விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல் பாசியை(ஸ்பைரூலினா), தலைவாசல் பகுதி விவசாயிகள் பண்ணை அமைத்து வளர்த்து வருகின்றனர்.
தமிழகத்தில் சில ஆண்டுகளாக பருவ கால நிலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தால் மழையின்மை, வெள்ளம் போன்றவை மாறி மாறி வருகிறது. மழையின்மையால் ஏற்படும் வறட்சி காரணமாக நெல், கரும்பு, வாழை போன்ற நன்செய் பயிர்களை உற்பத்தி செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். விவசாயம் சார்ந்த கோழிப்பண்ணை, பட்டுப்பண்ணை, மூலிகை பயிர் சாகுபடி என பல்வேறு தொழில் செய்வதில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். குறிப்பாக விண்வெளி வீரர்களுக்கு உணவு தயாரிக்கப் பயன்படும் கடல்பாசி (ஸ்பைரூலினா) வளர்ப்பில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது.
கடல் வாழ் உயிரினமான பாசிகளில் 27 வகை உள்ளது. அவற்றில் 14 வகை கடல்பாசிகள் மருத்துவத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. அவற்றில் `ஸ்பைரூலினா' என அழைக்கப்படும் கடல்பாசி மருத்துவ பயன்பாட்டிற்கும், துணை உணவாகவும் அதிகளவில் பயன்படுகிறது. கடல் பாசிகள் சில ஆண்டுகளுக்கு முன் கடலில் இருந்து எடுத்து மருத்துவத்திற்கு பயன்படுத்தப்பட்டது. தற்போது அதன் தேவை அதிகரிப்பு காரணமாக ஆய்வகத்தில் செயற்கையான முறையில் உற்பத்தி செய்து பயன்படுத்த முடிவு செய்யப்பட்டது. திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம் மற்றும் சேலம் மாவட்டம் தலைவாசல் உள்ளிட்ட பகுதியில் மட்டும் முதற்கட்டமாக கடல்பாசி வளர்ப்பு தொழிலை விவசாயிகள் மேற்கொண்டு வருகின்றனர். தலைவாசல் அருகே உள்ள வேநாயகபுரம் கிராமத்தில் ராஜேஸ் என்ற விவசாயி கடல்பாசி வளர்ப்பு தொழிலில் ஈடுபட்டு வருகிறார்.
அதற்காக பிரத்யேகமாக கட்டப்பட்டுள்ள தொட்டியில் தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதில், தாய் வகை கடல் பாசி விடப்படுகிறது. நாள்தோறும் அரை மணி நேரத்திற்கு ஒரு முறை நீர் தொட்டியில் கடலில் தோன்றுவது போல் செயற்கையான முறையில் அலை எழுப்பி, பாசி கூடுதலாக வளர பணிகள் செய்யப்படுகிறது. திறந்தவெளியில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பநிலைக்கு மேல் இருந்தால் அவை நன்றாக வளர்கிறது. கடல் பாசி ஒரு கிலோ ஆயிரம் ரூபாய் வீதம் வாங்கப்படுகிறது. நாள்தோறும் வருவாய் என்பதால் விவசாயிகள் கடல் பாசி வளர்ப்பு தொழிலில் களமிறங்கியுள்ளனர்.
விவசாயி ராஜேஸ் கூறுகையில், "கடல் வாழ் தாவரமான கடல் பாசி வளர்ப்புக்கு தொட்டி அமைக்கப்படுகிறது. ஆயிரம் லிட்டர் தண்ணீர் தொட்டியில் `மதர் கல்சர்' எனும் தாய் விதை 2 கிலோ விடப்படுகிறது. அதற்கு உணவாகவும், வேறு உயிரினம் வளர்வதை தவிர்க்கவும் சோடியம் பை கார்பனேட், யூரியா, மங்கனீசியம், பொட்டாசியம், பெரஸ் சல்பேட், சோடியம் குளோரைடு, பாஸ்பாரிக் அமிலம் போன்றவை ஒரு குறிப்பிட்ட அளவில் தொட்டியில் கரைக்கப்படுகிறது. 200 சதுர அடி தொட்டியில் நான்கு ஆயிரம் லிட்டர் தண்ணீரில் 4 கிலோ கொண்ட தாய் பாசி விடப்படும். தாய் பாசி விடப்பட்டு 15 நாளில் அவை அறுவடை செய்யப்படும். நாள்தோறும் 500 கிராம் வரை கடல் பாசி எடுக்கப்படும். அவை மாத்திரையாகவும், துணை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது," என்றார்.
மூலிகை சாகுபடி இயக்கத் தலைவரும், கடல்பாசி வளர்ப்பு பயிற்சியாளருமான திருப்பத்தூர் ராஜாமணி கூறுகையில், `கடல் பாசி என்பது இயற்கையின் வரப்பிரசாதம். 500 மில்லி கிராம் கடல் பாசி ஒரு கிலோ காய்கறிக்கு சமம். கடல் பாசியினை மாத்திரையாக 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் ஒரு கிராம் கொண்ட இரண்டு மாத்திரையும், சிறியவர்கள் அரை கிராம் கொண்ட ஒரு மாத்திரையும் சாப்பிடலாம். புற்றுநோய், சர்க்கரை நோய், காசநோய், மூட்டு வலி, இரும்பு சத்து குறைபாடு உள்ளவர், மாதவிடாய் சார்ந்த நோய்கள் மற்றும் வெள்ளைபடுதல் போன்றவை தடுக்கப்படும். கடல் பாசியானது அதிகளவில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதியாகி வருகிறது. இந்தியாவிலும் மாத்திரை தயாரிக்க பயன்படுகிறது. விண்வெளிக்கு ராக்கெட்டில் செல்பவர்கள் கடல் பாசியால் தயாரிக்கப்பட்ட மாத்திரைகளையே சாப்பிடுகின்றனர்," என்றார். இத்தொழிலில் கூடுதல் வருவாய் கிடைப்பதால், ஏராளமான விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
தினமலர் 26-02-2008
கடல் பாசி- தலைவாசல் பகுதி விவசாயிகள்
பதித்தவர் திவாண்ணா இந்த நேரத்தில்
குறிச்சொற்கள் ஊடகத்தில் நல்ல சேதி
Subscribe to:
Post Comments (Atom)
2 மறுமொழிகள்:
இப்படி ஒரு தொழிலா? கேள்விப்பட்டதே இல்லை.
நன்றி.
Please check and tell us the feedback what are all the medicinal use it ll provide
Post a Comment